நீண்ட காலம் வாழ, வீட்டிலேயே செய்துகொள்ளக் கூடிய எளிய சோதனையை மேற்கொள்ளுங்கள்- உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்திற்காகவும் இதைச் செய்யுங்கள்
குடல் புற்றுநோயானது ஆஸ்திரேலியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஆட்கொல்லிப் புற்றுநோயாகும். இது எந்த அறிகுறிகளும் இல்லாமல் உருவாகலாம். மேலும், 50 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு இதற்கான குடும்ப வரலாறு இல்லை என்றாலும், அல்லது அவர்கள் ஆரோக்கியமாக இருப்பதுபோல் உணர்ந்தாலும் கூட இதனால் அதிகமாக பாதிக்கப்பட வாய்ப்புண்டு.
நல்ல செய்தி என்னவென்றால், ஆரம்பத்தில் கண்டறியப்பட்டால், 90% குடல் புற்றுநோய்களுக்கு வெற்றிகரமாக சிகிச்சையளிக்க முடியும். இதனால்த்தான் பரிசோதனையை மேற்கொள்வது மிகவும் முக்கியமானது.
நீங்கள் 50 முதல் 74 வயதிற்குட்பட்டவராக இருந்தால், அரசாங்கத்திடமிருந்து இலவச வீட்டு சோதனைக் கருவியைப் பெறுவீர்கள். எல்லா ஆண்களும் பெண்களும், அவர்கள் எந்த மொழி பேசினாலும் சரி, அவர்கள் எவ்வளவு காலம் ஆஸ்திரேலியாவில் இருந்தாலும் சரி, அச் சோதனைக் கருவி தங்கள் வீடுகளுக்கு அனுப்பப்படும் போது சோதனையைச் செய்ய வேண்டியது அவசியம்.
பரிசோதனை என்றால் என்ன?
குடல் புற்றுநோய்க்கான சோதனை என்பது வீட்டில் செய்யக்கூடிய ஒரு எளிய பரிசோதனையை உள்ளடக்கியது. இந்த சோதனை, மனித கண்களால் கண்டறியமுடியாத மற்றும் குடல் புற்றுநோயின் ஒரு அறிகுறியாக இருக்கக்கூடிய, உங்களது மலத்தில் உள்ள இரத்தத் தடயங்களைக் கண்டறிகிறது.
எவ்வாறு இந்த பரிசோதனை செயல்படுகிறது?
சோதனையை நிறைவேற்ற, சோதனைக் கருவியைப் பயன்படுத்தி, இரு வேறு மலம் கழித்தல் செயற்பாடுகளின் போதும் சிறிய மாதிரிகளை எடுக்க வேண்டும். இவை ஒரு நோயியல் ஆய்வகத்தில் பகுப்பாய்வு செய்யப்படும்.
இச் செயல்முறையானது விரைவானது, எளிமையானது மற்றும் சுகாதாரமானது. பங்கேற்பாளர் படிவத்தில் சேகரிக்கப்படும் விவரங்கள் இரகசியமானவை.
நான் எப்போது இந்த பரிசோதனையைப் பெறுவேன்?
2020 முதல், 50-74 வயதுடைய அனைத்து தகுதியுள்ள ஆஸ்திரேலியர்களும் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை பரிசோதனையை மேற்கொள்ள அழைக்கப்படுவார்கள்.
நீங்கள் ஒரு சோதனைப் பொதியைப் பெறவில்லை என்றால், உங்கள் மொழி பேசும் ஒருவருடன் பேச 13 14 50 என்ற எண்ணை அழைக்கவும், மற்றும் Cancer Council-உடன் பேச வேண்டும் என கேட்கவும், அல்லது உங்களது வைத்தியருடன் பேசவும்.